search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்ட தொழிலாளர்கள்"

    • கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.
    • தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள்.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை-சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் கூறியதையெடுத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.

    இதனால் மேலும் அச்சம் அடைந்த வனப்பகுதி மக்கள் தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் இடையே மீண்டும் அதிகாலை வேலைக்கு செல்வதற்கு மக்கள் மத்தியில் புலியின் நடமாட்டத்தை அறிந்து பெரும் அச்சம் அடைத்தனர். வனத்துறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை தீவிரமாக இரவு பகலாக கண்காணித்து வந்தனர். புலியின் உருவம் கேமராவில் பதியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து புலியை தேடினார்கள். ஆனால் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அரசு ரப்பர் கழகத்தில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் புலியை பிடித்தால் தான், அதிகாலையில் ரப்பர் பால் வடிப்பு தொழிலுக்கு செல்ல முடியும், இல்லை என்றால் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று ஆண்களும், பெண்களும் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

    இதனால் அரசுக்கு தினமும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள். தோட்ட தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வை தோட்ட தொழிலாளர்களிடம் ஏற்படுத்தினார்கள்.

    அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்களிடம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிகாலையில் பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் செல்வதற்கு முன், வனத்துறை ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை பார்த்து சென்ற பிறகு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்வது என்றும், அதிகாலை வேலைக்கு செல்வதை தவிர்த்து சற்று தாமதமாக பணிக்கு செல்வது என்றும், தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகில் அதிக மின் விளக்குகள் மாட்டுவது என்றும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் ஆனது. அதன் பிறகு இன்று பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு சென்றார்கள். அதேவேளையில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக தீவிர கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×